26

ந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்ட வரைவுப்படி நாடாளுமன்றத்தில் ஆட்சிமொழிச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தி மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுக் கிட்டதட்ட தோற்றுப் போக வேண்டிய அத்தீர்மானம் ஒரேவொரு வாக்கு வேறுபாட்டில் வெற்றி பெற்று இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், தொடக்கமுதலே இந்திக்குத் தமிழகத்திலிருந்து எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் இருந்தன.

இராஜாஜி முதல்வராக இருந்தபோதே அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றார். தமிழக மக்களின் கடுமையான எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் அம்முயற்சி கைவிடப்பட்டது. ஆனால், பள்ளிகளில் ஒரு பாடமாகக் கற்பித்து வந்தனர். இந்திமொழியில் தேர்வுகள் நடந்தாலும் வெற்றி தோல்விக்கு அம்மதிப்பெண்கள் கணக்கிடப்படவில்லை.

மக்களிடையே மிகவும் செல்வாக்கு வாய்ந்த முதல்வர் காமராசர் காலத்தில் கூட இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்கும் ஆணைகள் வெளியிடப்படவில்லை. தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதையும் சட்டசபையில் முன்வைக்கவில்லை. 1962ஆம் ஆண்டு வரை ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காமராசர் தம் முதல்வர் பதவியை இராஜினாமா செய்துவிட்டுப் போகும்வரை ஆட்சிமொழிப் பிரச்சனையைத் தொடவே இல்லை. 1963 ஆம் ஆண்டு பக்தவச்சலம் முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்ட நாளில் இந்திதான் ஆட்சிமொழி என அரசாணை வெளியிடத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அன்று சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த அன்றைய முதல்வர் டாக்டர்கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அத்தீர்மானத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார். தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்யும்முன் ஆளுங்கட்சிச் சட்டப்பேரவை உறுப்பினர்கள்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய கக்கன் ‘இன்றைய சூழலில் மொழிப் பிரச்சனையை எடுப்பது முறையாக இருக்குமோ என்பதைச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்’ என்று, அவருக்கே உரித்தான அமைதியான முறையில் எடுத்துவைத்தார். இதே கருத்தைப் பிறஅமைச்சர்களும் கூட்டத்தில் எடுத்துச் சொன்னார்கள். இந்தச் செய்திகள் மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. கட்சியின் கட்டுப்பாட்டை மதித்து நடந்தமையால் கக்கனும் பொதுமேடைகளில் எடுத்துச் சொல்லவில்லை. கக்கன் பண்புநலன் மிக்க கட்டுப்பாடுடைய கட்சித்தொண்டனாக வாழ்ந்தார்.

நாகையில் பிறப்பை வைத்தார். ‘நா’ ‘கை’யில் தமிழை வைத்தார் என்பார்களே அந்த மறைமலையடிகள், முத்தமிழ்க் காவலர் கி..பெ.விசுவநாதன், தமிழ்த்தென்றல்திரு.வி.., தொண்டுக்கழகம் தூயபெரியார் இராமசாமி, அறிஞர்அண்ணா, பாவேந்தர்பாரதிதாசன், கருமுத்து தியாகராயச் செட்டியார் இன்னோரன்ன எண்ணற்ற தமிழ்மேதைகள் ‘எந்தப்பக்கம் இந்தி வரும்’? என்று குரல் முழக்கம் செய்தனர்.

போராட்ட நிலையை நேரில் கண்டறிய கக்கன் மதுரைக்கு வந்தார். அவரைச் சூழ்ந்து கொண்டு பயணத்தைத் தடைசெய்த நாளான 1965ஆம் ஆண்டு சனவரி இருபத்தாறாம் நாளை எவராலும் மறக்க முடியாது. அதைப்போல், பிப்ரவரி ஆறாம் நாள் காரைக்குடிப் பயணியர் மாளிகையில் தங்கியிருந்த கக்கனை, இந்தி எதிர்ப்புப் போராட்ட மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் சூழ்ந்து கொண்டு கல்வீச்சில் இறங்கினார். கக்கனின் மகிழுந்தையும் சேதப்படுத்தினர். தடியடி நடத்தி மக்களைக் கலைத்து விட்டதைத்தவிர வேறு கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.

தமது மகிழ்வுந்திற்கும் தமக்கும் இடையூறு வந்த பின்னும் சூழலைக் கனிவோடு கருதிப் பார்த்த கக்கன், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செய்தி அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது. சுற்றுப்பயணத்தை நிறுத்திவிட்டுச் சென்னை திரும்பினார். முதல்வர் பக்தவச்சலத்தைச் சந்தித்து விவரம் கேட்டு மனம் வருந்தினார்.

எப்படி இருந்தாலும் காவல்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் கக்கன் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டியதாகிவிட்டது. மேலும் பல தேவையற்ற குற்றச்சாட்டுகளையும் ஏற்க வேண்டியதாகிவிட்டது.

என்னதான் பொறுப்பேற்றுக் கொண்டாலும், மாணவர்கள் மீதும் பொதுமக்களின் மீதும் கனிவான நோக்கும், கலங்குவோருக்கு உதவுகின்ற மனநிலையும் கொண்ட கக்கன், மக்களைச் சுட்டுத்தள்ள ஆணையிட்டிருக் கமாட்டார் என்றே கருதவேண்டும். எங்கோ ஏற்பட்ட நிர்வாகச்சறுக்கல் என்றே தமிழுலகம் இன்றும் அந்நிகழ்வைக் குறித்து வைத்திருக்கிறது

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book