25

றைவன் எல்லோருக்கும் பொதுவானவன். அவன் பெயரால் அமையும் ஆலயம் என்பதும் பொது. இதில் ஒருபிரிவினர் ஆலயத்திற்குள் சென்று வழிபடுவதும், ஒருபிரிவினர் வெளியில் நின்று வழிபடுவதும், உள்ளே சென்று வணங்கினால் ஆலயத்தூய்மை கெட்டுவிடும் என்று புறக்கணிப்பதும் மனித நேயத்திற்கு ஏற்புடையதன்று.

ஒரே மண்ணில் பிறந்து ஒன்று போல் வாழ்ந்து வரும் மானிடருள் வேற்றுமை காண்பது மனிதத் தன்மையன்று’ என்ற தமது சிந்தனையை வைத்தியநாதய்யர் கட்சி செயற்குழுக் கூட்டங்களில் பலமுறை வலியுறுத்தினார். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள் ஒப்புக்கொள்வதாக இல்லை. இங்கு,

முப்பது கோடியார் பாரதத்தார் இவர்

முற்று ஒரே சமூகம் என

ஒப்புந்தலைவர்கள் கோயிலில் மட்டும்

ஒப்பாவிடில் என்ன சுகம்’’.

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடிய வரிகளை நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது. ஒதுக்கப்பட்டவர்கள் ஆலயப் பிரவேசம் செய்தால் சமுதாயத்தில் கலவரங்கள் வெடிக்கும். அதனால், நமது நோக்கமான விடுதலைப்போர் வலிவு பெறாமல் போய்விடும் என்று காரணம் கூறித் தட்டிக்கழித்தனர். ‘இந்திய மண்ணில் நம்முடன் வாழ்பவர்களுக்கு விடுதலை கொடுக்க மறுத்து, அடிமைகளாக வைத்துக்கொண்டு, நாட்டிற்கு விடுதலை கேட்பது எந்தவிதத்தில் நியாயமாகும்?’ என்ற வைத்தியநாதய்யரின் வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ‘சொந்தச் சகோதரனுக்குக் கொடுமை என்று சொல்ல நமக்கென்ன உரிமை இருக்கிறது; காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொண்ட நாம் செய்யவில்லை என்றால் வேறு எவர் செய்யப்போகிறார்கள்; அப்படியொரு சமுதாய விடுதலை நாம் கொடுக்கவில்லை என்றால் நாம் பெறப்போகும் விடுதலை இந்தச் சமுதாயத்திற்கு என்னப் பயனைக் கொடுக்கப் போகிறது’ என்றெல்லாம் வாதிட்டு ஒரு முடிவுக்கு வந்தார் ஐயர்.

கட்சியினுடைய ஒப்புதலைப் பெறமுடியாத போதும், கலவரங்கள் வெடிக்கும் என்று அச்சுறுத்திய பின்னும் ஆலயநுழைவு செய்தே தீருவது என்ற முடிவுக்கு வந்தார் ஐயர்.

சொந்தச் சகோதரன் துன்பத்தில் சாதல்கண்டும்

செம்மை மறந்தாரடி’

என்ற வரிகளைப் பாரதியாரின் செல்லப்பிள்ளையான வைத்தியநாதய்யர் தம் மனத்தில் கொண்டிருந்தாரோ! என்னவோ தெரியவில்லை! காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் அச்சுறுத்தலைத் துச்சமாக எண்ணினார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட உறுப்பினர் கக்கன், சேவாலய ஊழியர் பி.ஆர்.பூவலங்கம், ஆலம்பட்டி சுவாமிமுருகானந்தம், விருதுநகர் நகராட்சி உறுப்பினர் எஸ்.எஸ்.சண்முகநாடார் ஆகியோரை அழைத்து ஆலயப்பிரவேசத்திற்கு நாள் குறித்தார். அதையறிந்த கட்சி மேலிடம் வைத்தியநாத ஐயரை மீண்டும் அச்சுறுத்தியது. அன்று முதலமைச்சராக இருந்த இராஜாஜி அவர்கள் ‘ஆலயப்பிரவேசத்திற்குச் சட்டசபையைக் கூட்டிச் சட்டமியற்றிய பிறகே அனுமதி வழங்க முடியும்’ என்று வாதிட்டுக் காலம்கடத்தியதையும் வைத்திநாத ஐயர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர், ‘எனக்காகவும் என் மக்களுக்காகவும்தான் அரசே தவிர அரசிற்காக நாங்களில்லை’, என்றார். காவல்துறையும் அரசியல் தலைவர்களும் கொடுத்த அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் ஆலய நுழைவு செய்யத் துணிந்தார். 1939ஆம் ஆண்டு ஜுலை எட்டாம் நாள் வரலாற்று ஏடுகளில் இனிமை தேக்கிய பக்கமாகும். இறைவனின் மக்களுள் வேறுபாடில்லை ‘அனைவரும் சமமே’ என்ற குறிக்கோளை ஏந்தி மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்குள் நுழைந்தனர். பகலில் பல தடைகள் இருந்தமையால் இரவு ஒரு மணிக்கு நுழைந்தனர்.

எந்தெந்தச் சமுதாயங்கள் கோயிலுக்குள் சென்று தொழுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டனவோ அந்தந்தச் சமுதாயத் தன்னலமில்லாத தொண்டர்களை அணிவகுத்து கூட்டிச் சென்றார் வைத்தியநாதஐயர் என்பதும் அதில் கக்கன் முதன்மையானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூத்திரர்கள் ஆலயத்திற்குள் நுழைந்ததால் ‘மதுரை மீனாட்சியம்மன்’ ஆலயத்தை விட்டுச் சென்று விட்டதாகச் சொல்லிக் கோவில் பூசாரிகள் வெளியே வந்து அதே வளாகத்திலுள்ள சொக்கநாதர் சன்னதியில் வழிபாட்டை நடத்தினர். அவ்வாறு மீனாட்சியம்மன் வெளியே சென்று விட்டாளா!, என்று தெரிந்து கொள்ள இராஜகோபாலச்சாரியார் காமராசரைத், ‘தற்போது மீனாட்சி எப்படி இருக்கிறாள்?’ ஆலயத்தில் இருக்கிறாளா? போய்விட்டாளா?’ என்று கேட்டார். காமராசர் ‘இப்போதுதான் மீனாட்சி மகிழ்வோடு இருக்கிறாள், தான் பெற்ற பிள்ளைகளைப் பார்க்கத் தடைவிதித்திருந்த துரோகிகள் விலகியதால் மீனாட்சி மகிழ்வாக இருக்கிறாள்’ என்று காமராசர் விமர்சனம் செய்ததாக மேடையில் குமரி அனந்தன் கூறியது நெஞ்சைத் தொடுகிறது.

இந்தப் பணியைச் செய்து முடிக்கத் தூண்டியும், உதவியும், பெருமை சேர்த்த கக்கனின் நல்லுள்ளத்தை வைத்தியநாதய்யர் பல சூழல்களில் புகழ்ந்திருக்கிறார். தன்மானம் மிக்க இச்செயலால் மனித இதயமுடைய மக்களின் முன் வைத்தியநாதய்யர் தலைநிமிர்ந்து நடந்தார். அதற்குக் கக்கன் துணை நின்றார்.

வௌவால் அடைந்து கெட்ட

வாடை வீசும் கோயில் தன்னில்

வாயிற்படி திறந்து வைத்தால் தோழரே கொடிய

வறுமையெல்லாம் தொலைந்திடுமோ’ தோழரே!’ நமக்கு

வருவது தான் என்ன? சொல் தோழரே’

என்று நைந்த உள்ளத்தோடு பாடும் தத்தனூர்க்கவிஞர் அரங்கராசனின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தாலும் மனிதநேயமுடைய சமுதாயச் சீர்த்திருத்தம் என்ற பார்வையில் இச்செயலும் கக்கனின் தொண்டும் நினைவு கொள்ளத்தக்கன.

இத்துணிவை மக்கள் வரவேற்றனர். விடுதலைப்போர் ஒரு பக்கம் சமுதாயப்போர் மறுபக்கம் என இருமுனைப் போரில் ஈடுபட்ட கக்கனின் பேரும் புகழும் மக்களிடையே பரவத் தொடங்கின.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book