24

வேண்டாமே

தீண்டாமை ஒப்புகின்றார்

தீண்டாரிடம் உதவி

வண்டாமல் இல்லையடி சகியே

வண்டாமல் இல்லையடி’ (பாவேந்தர்)

இவர் வாழ்ந்த தும்பைப்பட்டிக் கிராமத்தில் குடிநீர், மழைநீர் தேங்கும் குளத்திலிருந்து தான் எடுத்துப் பயன்படுத்தவேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘பீக்குளம்’ என்ற குளத்திலிருந்தும் பிற சாதியினருக்கு ‘ஊருணி’ என்ற குளத்திலிருந்தும் குடிநீர் எடுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது,

பீக்குளம் மக்கள் வெளிவாசல் சென்று கைகால் கழுவுவதற்கும் மாடுகள் குளிப்பாட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் குளம். அந்த நீரைத்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீராகப் பயன்படுத்தி வந்தனர். அதே சமயத்தில் ஊருணி என்பது எவரும் குளிக்காமலும் மாடுகள் வாய்வைக்காமலும் மிகவும் பாதுகாப்பாகக் காவலிட்டுக் காப்புச் செய்து வந்த குளமாகும், இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் எடுக்கக்கூடாது என்பது ஊர்க்கட்டுப்பாடாகும்.இதை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்களும் ஊருணியைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைத் தம்முடன் இருக்கும் தலைவர்களான ஒருங்கான்அம்பலம் மற்றும் கருப்பன் செட்டியார் என்கிற கருப்பையாசெட்டியார் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தார் கக்கன்,

நல்லுள்ளமும் மனிதநேயமும் கொண்ட அத்தலைவர்கள் ஆதரவு தெரிவித்ததுடன் இக்கொடுமைக்கு எதிராகத் தாங்களே முன்னின்று போராட ஒப்புக் கொண்டனர். அதனால், அன்று ஊர்ப்பொதுச் சேவையில் ஈடுபட்டிருந்த குப்பையன் (குப்புசாமி) என்பவரின் தலைமையில் ஊருணியில் குடிநீர் எடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி கக்கன், ஒருங்கான் அம்பலம், கருப்பன் செட்டியார் ஆகியோர் முன் செல்ல மக்கள் பின் சென்றனர். அனைவரும் குளத்தில் குடிநீர் எடுத்துக் கொண்டு திரும்பும் போது அம்பலவர் இனத்து மக்கள் கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களுடன் வழி மறித்தனர். தாழ்த்தப்பட்ட மக்களின் கைகளில் குடிநீர், அம்பலவர் மக்களின் கைகளில் ஆயுதம்! என்ன நடக்குமோ! என்ற அச்சத்தோடு பலர் வந்தனர். ஆனால், அச்சம் என்பது மடமையடா! என்ற தெளிந்த சிந்தனை கொண்ட தலைவர்களை அவ்வச்சம் அணுகவில்லை. காந்திய வழியில் எதிரணியினரைச் சந்திக்க முடிவு செய்தனர். துணிந்த உள்ளம் கொண்ட ஒருங்கான்அம்பலம் முன்வந்து பேசத் தொடங்கினார்.

நானும் அம்பல சமுதாயத்தைச் சேர்ந்தவன்தான், நம்மோடு வாழும் மக்கள் தூய்மையற்ற குடிநீரைக் குடிப்பது என்ன நியாயம்? இயற்கையால் வழங்கப்பட்ட நீரைக் கொடுக்க மறுப்பது எவ்வளவு பெரிய கொடுமை’ என்றார். ஆனால் எவரும் செவிசாய்க்கவில்லை. அதனால் மீண்டும் பேசத் தொடங்கினார். ‘இதோ உங்கள் மக்களை வெட்டி உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால் என்னைத் தீர்த்துக்கட்டிவிட்டப்பிறகு தீர்வு காணுங்கள்’ என்று கூறி அவரும் அமர்ந்தார். அடுத்து முன்வந்த கக்கன் ‘இந்த இரு தலைவர்களை வெட்டுவதற்கு முன் என்னை வெட்டுங்கள். எங்கள் சமுதாயத்திற்கு விடுதலை பெற்றுத்தர முன்வந்த தலைவர்கள் சாவதை நான் பார்த்துக் கொண்டிருக்கமாட்டேன். அவர்களுக்கு முன் நான் மரணம் அடைய வேண்டும். இதோ என்னை முதலில் வெட்டி விட்டு என் தந்தைமார்களை வெட்டுங்கள்’ என்று சொல்லி அவரும் அமர்ந்தார். எதிரணியில் இருந்த வன்முறைச் சிந்தனையாளர்கள் என்ன செய்வதென்றே புரியாமல் தடுமாற்றம் கொண்டனர். இறுதியில், இன்றிரவு ஊர்ப்பஞ்சாயத்தில் கூடி முடிவு செய்து கொள்ளலாம் என்று கலைந்தனர்.

அன்று இரவு ஊர் மக்கள் கூடி மிகப்பெரிய அளவில் பஞ்சாயத்து நடத்தினர். இனக்கலவரமாக மாறிவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்து இனமக்களும் ஒன்று திரண்டு அமர்ந்திருந்தனர். ஒருங்கான்அம்பலம், கருப்பன்செட்டியார் ஆகியோரும் ஊர் மன்றில் கலந்து கொண்டனர். மனித நேயச்சிந்தனை என்ற அடிப்படையில் வாதத்தை எடுத்து வைத்தனர். பல்வேறு எதிரணி சொல்வீச்சிற்கிடையே இவர்களின் வாதத்திறமையால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருணியின் ஒரு மூலையிலும் சாதிஇந்துக்கள் மறுமூலையிலும் நீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவும் சமுதாயக் கொடுமையின் மறுவடிவம்தான் என்றாலும் அன்றைய சூழலில் அந்த மக்களை அமைதிப்படுத்த இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.

காலப்போக்கில் அனைத்தும் மறைந்து இன்று இரு இனமக்களும் தோழமையுடன் வாழ்கின்றனர். இந்தத் தோழமைக்கு எதிராக இருந்த தீண்டாமைக் கொடுமையை நீக்கிச் சமுதாய ஒற்றுமைக்கு வழிவகுத்துத் தந்த பெருமையின் பெரும்பங்கு கக்கனையேச்சாரும் என்பதில் எவருக்கும் ஐயமில்லை!. கக்கன், ஒருங்கான்அம்பலம், கருப்பன்செட்டியார் ஆகியோரை அவ்வட்டார மக்கள் இன்றும் நன்றியோடு நினைவு கொள்கிறார்கள். ‘எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம். எல்லோரும் இந்நாட்டு மக்கள்’ என்ற உடன்பிறப்புணர்வு எப்போது ஏற்படுமோ என்ற ஏக்கம் கக்கன் பிறந்த ஊரில் இன்று மறைந்துவிட்டது. அதற்காக இன்று தமிழகச் சிற்றூர்களில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கக்கனா பிறக்க முடியும்? ஆனால் ஓர் ஒருங்கான்அம்பலமும் கருப்பன்செட்டியாரும் உருவாகலாமே!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book