23

நாட்டின் நலனைக் காக்கக் கட்சி நல்ல முறையில் இயங்க வேண்டும். அதற்காகக் கட்சியிலுள்ள மூத்தத் தலைவர்கள் அரசியல் பதவிகளை விட்டுக் கட்சிப்பணிக்கு வரவேண்டும் என்ற திட்டத்தைக் காமராசர் கொண்டுவந்தார். தாமே இத்திட்டத்தின் முன்னோடியாக நடக்க விரும்பிய காமராசர், முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அதனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். பதவிச் சுகத்தை விட மக்களின் தொண்டில் கிடைக்கும் சுகமே பெரிதானது என்று கருதிய உலகத் தலைவர்களில் அமெரிக்காவில் கென்னடியும், உருசியாவில் குருச்சேவும் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களோடு இணையாக ஒப்பிடும் அளவிற்குக் காமராசரின் இச்செயல் புகழ்பெற்றது.

அவ்வாறு முதல்வர் பதவியை விட்டு விலகிய போது அடுத்த முதல்வராகக் கக்கன் வரவேண்டும் என்பதில் காமராசர் ஆர்வம் கொண்டிருந்தார். காமராசர் தமது இந்த எண்ணத்தில் பிடிவாதமாக இருந்ததாகவும், கட்சியின் நலன் கருதிக் கட்சியின் செயற்குழு என்ன முடிவு எடுக்கிறதோ அதைச் செய்து கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டதாகவும் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

நிலைமையை நன்கு உணர்ந்த கக்கன், தாமே முன்வந்து அமைச்சரவை மூத்த உறுப்பினர் எம்.பக்தவச்சலம் அவர்களை முதல்வராக முன் மொழிந்தார். இப்படி முகமலர்ச்சியோடு முன்மொழிந்ததைக் கண்ட பக்தவச்சலம் மனம் நெகிழ்ந்து போனார். பெருந்தலைவர் காமராசரின் உயர்ந்த உள்ளத்தையும் கக்கனின் விட்டுக் கொடுக்கும் நற்பண்பையும் இன்றும் பலர் நினைவு கூர்கின்றனர்,

இராமனை, ‘மெய்த்திருப்பதும் மேவு’ என்ற போதும், ‘இத்திருத்துறந்து காடு ஏகு’ என்ற போதும், அவன் முகம் ‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா’ என்ற கம்பன் வரிகள் சமூகத் தொண்டன் கக்கனுக்கும் பொருந்தும்.

1963ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் நாள் பக்தவச்சலம் அரசின் முதல்வரானார். காமராசர் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் அனைவரையும் அப்படியே வைத்துக் கொண்டார். கக்கனின் நல்லுள்ளத்தை வெகுவாகப் புகழ்ந்த பக்தவச்சலம் உள்துறை, நிதி, கல்வி, சிறை, தொழிலாளர் நலம், அறநிலையத்துறை, அரிசன நலம் போன்ற மிகப்பெரிய துறைகளின் பொறுப்பை வழங்கிக் கக்கனை உயர்த்தி மகிழ்ந்தார்,

கக்கனுக்குப் பின்னால் இன்றுவரை எந்தவொரு தாழ்த்தப்பட்ட குடிமகனும் இவ்வளவு பெரிய பொறுப்புள்ள துறைகள் பெற்ற அமைச்சராக இருந்ததில்லை.

மேலும், மைய அரசால் அகில இந்திய வீட்டுவசதி வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். உடல் நலக்குறைவின் காரணமாக அந்த வாரியக் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளவே இல்லை. தொடர்ந்து இவர் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாததைக் காரணம் காட்டி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பதவி வந்ததால் கக்கன் மகிழவுமில்லை அதிலிருந்து நீக்கப்பட்டதால் வருந்தவுமில்லை. இவரை அரசியலில் ஒரு புரட்சித்துறவி எனலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book