22

ந்தாண்டுக் காலம் பல்வேறு சமுதாய மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றியதால் நல்ல பேரும் புகழும் கக்கன்ஜிக்கு வந்து சேர்ந்தன.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உழை’

என்றகுறளுக்கு இணங்கப் பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் கக்கன் நேர்மையான தன்னலம் கருதாத அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்,

1962ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1962-67க்கான அடுத்த பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கட்சியின் ஆணைப்படி மேலூர்த் தனித்தொகுதியில் கக்கன் போட்டியிட்டார். இந்த முறையும் திராவிட முன்னேற்றக் கழகம் கக்கனை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை என்றாலும், பொதுவுடமைக் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தியது. உண்மைத் தொண்டனான கக்கன், தமது எதிரணி வேட்பாளரைக் காட்டிலும் 16,495 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாவது முறையும் சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அந்தப் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்றத் தலைவராகக் காமராசரைத் தேர்ந்தெடுத்தனர். அதனால், மூன்றாவது முறையாக அமைச்சரவை அமைக்கும் வாய்ப்பினைக் காமராசர் பெற்றார். அந்த அமைச்சரவையில் கக்கனையும் அமைச்சராகச் சேர்த்துக் கொண்டார்.

1962ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் கக்கன் அமைச்சர் பொறுப்பை ஏற்றார். வேளாண்மை, உணவு, சிறுபான்மையினர் நலம், மதுவிலக்கு, கால்நடைக் காப்பு, அரிசனநலம் ஆகிய மிக முதன்மையான பொறுப்புகள் கக்கனிடம் ஒப்படைக்கப்பட்டன. எம்.பக்தவச்சலம், சோதி வேங்கடாசலம், ஆர்,வெங்கட்ராமன், வி.இராமையா, நல்லசேனாதிபதி சர்க்கரை மன்றாடியார், பூவராகன் ஆகியோர் கக்கனுடன் அமைச்சரவையில் இருந்த பிற அமைச்சர்களாவர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book