2

க்கன்ஜியின் தகப்பனார் பெயர் பூசாரிகக்கன். தாயார் பெயர் குப்பி. இவர்தம் முன்னோர்கள் தஞ்சை மாவட்டத்தில், திருவாரூருக்கு அருகிலுள்ள கர்காற்குடி என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். இவர்தம் தகப்பனாருக்கும், தாயாருக்கும் 1901-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தாயார் குப்பி, தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். திருமணமானவுடன் தாயும், தந்தையும் தும்பைப்பட்டிக்கே குடிபெயர்ந்தனர்.

இத்தம்பதியினருக்கு நான்கு ஆண் மக்கள். மூத்த மகன் பர்மாவில் தனது 15-ஆம் வயதில் இறந்து விட்டார். இரண்டாவது மகன் வடிவேல் மூன்று வயதில் காலரா நோயினால் காலமானார். மூன்றாவது மகன் தான் கக்கன்ஜி. இவர் 18.06.1909 ஆம் நாள் பிறந்தார். நான்காவது மகன் பெரியகருப்பன் என்பவர், தற்சமயம் தும்பைப்பட்டியிலுள்ள வீரகாளி அம்மன் கோவில் பூசாரியாகப் இருந்தார்.

தும்பைப்பட்டி வீரகாளி அம்மன் கோவில், கள்ளர் நாட்டில் புகழ்பெற்றது. தும்பைப்பட்டிக் கள்ளர்களின் திருவிழா இன்றும் இக்கோவிலை மையமாக வைத்து நடைபெற்று வருகிறது. கக்கனின் தகப்பனார், இறையுணர்வு மிக்கவராகவும் கண்ணியமானவராகவும் தனித்து விளங்கியதால், கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்கள் அவரை வீரகாளியம்மன் கோவில் பூசாரியாக ஏற்றுக் கொண்டார்கள். சாதிக்கொடுமைகளும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த அந்தக் காலத்தில் நாட்டுக்கள்ளர்கள் ஓர் அரிசன வகுப்பைச் சார்ந்தவரைப் பூசாரியாக ஏற்றுக்கொண்டு, பயபக்தியுடன் அவர் கையால் திருநீறு வாங்கிப் பூசிக்கொள்ளும் பழக்கம் அக்காலத்திலேயே இருந்து வந்தது என்றால் இதில் பாராட்டிற்கு உரியவர்கள் இருதரப்பினருமே ஆவார்கள். குறிப்பாகக் கக்கனின் தகப்பனாரின் ஆளுமைத்திறன், ஆன்மீக உணர்வு, கண்ணியமிக்க தூயவாழ்வு ஆகியன அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறது என்பதை இங்குக் கூர்ந்து நோக்க வேண்டும்.

கக்கன், ஒன்பது வயதுடைய சிறு பையனாக இருந்தபோது அவரைப் பெற்ற தாய் 1918-ஆம் ஆண்டு மரணமடைந்தார். பின்னர் 1920-ஆம் ஆண்டு, இவர்தம் தகப்பனார், முதல் மனைவியின் தங்கை பறம்பி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் மூலம் மேலும் நான்கு மகன்கள் பிறந்தார்கள். மூத்தமகன் வெள்ளைக்கக்கன் என்பவர் காதி போர்டின் இயக்குநராகப் பணியாற்றியவர். இரண்டாவது மகன் முன்னோடி என்பவர் தென்னக ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றுள்ளார். கக்கன்பற்றிய நூலை எழுதுவதற்கு மிகவும் தூண்டுகோலாய் அமைந்தவர்களில் இவரும் ஒருவர். மூன்றாவது மகன் வடிவேல் என்பவர், ‘மதுரா கோட்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றியவர். தற்சமயம் சமுதாயப் பொதுப்பணிகளில் ஈடுபாடு கொண்டவராகவும் அரசியல் பிரமுகராகவும் விளங்கி வருகின்றார். இந்நூல் ஆசிரியரின் நீண்ட கால நண்பரும் ஆவார். இவரின் மகள் கீதா வரலாற்றில் எம்.பில். பட்டம் பெறக்காத்துக் கொண்டிருக்கிறார். தனது பெரியப்பா கக்கன்ஜியின்பால் மிக்க நாட்டம் கொண்டு அவரைப்பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். மேலும் விரிவான ஆய்வை மேற்கொண்டு, அதன் மூலம் முனைவர் பட்டம் பெறும் தகுதிகளையும் இவரிடம் காண முடிகிறது. நான்காவது மகன் வழக்கறிஞராகச் செயல்பட்டு வருகிறார். கக்கன்ஜி தனது சின்னம்மா மீதும், சகோதரர்களின் மீதும் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தார். இவர்தம் தந்தை, தனது 92-ஆம் வயதில், 1957 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book