19

1957ஆம் அண்டு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் போதே பொதுத் தேர்தல் வந்தது. இத்தேர்தலை மாநிலத் தலைவராக இருந்து நடத்திய பெருமை கக்கனுக்கு உண்டு. அன்றைய தேர்தல் குழுவின் ஆணைப்படி இவரும் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தார். 1952க்கு முன் திருச்சி மாவட்டத்தில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டார். நல்லதோர் அரசியல் கட்சியாக வளர்ந்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக்கழகம் இவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை. ஆனால் பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த பி.வடிவேலு என்பவர் எதிர்த்து நின்றார்.

மாநில அளவில் நல்ல பேரும் புகழும் பெற்றிருந்த கக்கன், அவரை எதிர்த்து நின்ற வடிவேலு என்பவரைக் காட்டிலும் கிட்டத்தட்ட 12,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி மாலை சூடினார். 133 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் ‘பேரவைத் தலைவராகக் காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது முறையாகத் தம் அமைச்சரவையை அமைக்கும் காமராசர், ஏழுபேர் கொண்ட தம் அமைச்சரவையில் கக்கனையும் சேர்த்துக் கொண்டார். எம்.பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம். ஆர்.வெங்கட்ராமன், வி.இராமையா, லூர்தம்மாள் சைமன், எம்.ஏ மாணிக்கவேல் நாயக்கர், பூவராகவன் ஆகியோர் அமைச்சரவையின் பிற உறுப்பினராவர்.

1957ஆம் ஆண்டு ஏப்ரல் பதின்மூன்றாம் நாள் காமராசர் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் கக்கன் அமைச்சர் பொறுப்பை ஏற்றார். பொதுப்பணி, அரிசனநலம் ஆகிய துறைகளின் அமைச்சராக 1962ஆம் ஆண்டு மார்ச் பதினான்காம் நாள் வரை சிறப்பாகச் செயல்பட்டார். இவர் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்தார்.

தமது அரசியல் வளர்ச்சியில் முதன் முதலாகப் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார். அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் முதல் சுற்றுப்பயணமாக மதுரை மேலூருக்கு வந்தார். மேலூர் பயணியர் மாளிகையில் தங்கி இருந்த அமைச்சர் கக்கன், ஆலோசனைக்காக அழைத்த முதல் அதிகாரி மாவட்டக்கல்வி அதிகாரியாவார். அன்றைய மாவட்டக்கல்வி அதிகாரியாக இருந்த முனைவர் வேங்கடசுப்பிரமணியன் தமது துறைக்குத் தொடர்பில்லாத அமைச்சர் அழைப்பதில் அதிர்ந்து போனார் என்றாலும் மரபுகருதி அமைச்சரைக் காண வந்தார். மாவட்டத்தில் எத்தனை பள்ளிகள் இருக்கின்றன எத்தனை கிராமங்களில் பள்ளிகள் இல்லை என்பதை விசாரித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் ஓராசிரியர் பள்ளியைத் தொடங்கிட ஆவன செய்தார். கக்கன் அமைச்சராகி செய்த முதற்பணி கல்விப்பணியே.

அன்றைய மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்த முனைவர் வேங்கட சுப்பிரமணியன் பிற்காலத்தில் புதுச்சேரிப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான பின்னும் இந்தச் செய்தியைப் பல மேடைகளில் சொல்லிச் சொல்லி வியந்தார்.

இவ்வாறு, தமது பொறுப்பில் இல்லாத துறையாக இருந்தாலும், மக்களின் நலன் கருதி எதை முதலில் செய்ய வேண்டும் என்று எண்ணி அதற்கேற்பச் செயற்பட்டுள்ளார். ‘கல்வியே ஆன்மாவின் உணவு, அஃதின்றேல் நம் ஆற்றல்கள் எல்லாம் செயலற்று நின்றுவிடும், பயன்தரா’ இவ்வாறு வெளிநாட்டு அறிஞர் ‘மாகினி’ கூறியதை எண்ணும் போது மக்களின் ஆன்ம உணவாக, உணர்வாகக் கல்வியைக் கக்கன் கருதிவந்தார் என்பது வெள்ளிடைமலை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book