17

ராஜாஜி பதவி விலகியபின் தமிழகத்தின் முதல்வராக யார் பொறுப்பேற்க வேண்டுமென்ற கட்சி விவாதத்தில் கக்கன் அவர்களும் கலந்து கொண்டு, காமராசர் தலைமை ஏற்று முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கட்சியின் ஒருமனதான முடிவுக்கு இணங்கி காமராசர் முதல்வர் பொறுப்பை ஏற்றார். ஏழுபேர் கொண்ட அவர்தம் அமைச்சரவையில் எம்.பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம், எஸ்.எஸ்.இராமசாமிப் படையாட்சி முதலியோர் இடம் பெற்றிருந்தனர்.

காமராசர் முதல்வர் பொறுப்பை ஏற்றதும் இராஜ கோபாலச்சாரியார் நடைமுறைப்படுத்திய குலக்கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த காமராசர் முதல்வர் பொறுப்பை ஏற்றதும் கட்சித் தலைமையை எவருக்குக் கொடுப்பது என்ற விவாதம் வந்த போது கட்சியின் செயற்குழு கக்கன் அவர்களையே தெரிவு செய்தது. செயற்குழுவின் ஆணையை ஏற்றுக் கக்கன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கக்கன் 1954 முதல் 1957வரை மாநிலத் தலைமைப் பொறுப்பில் பணியாற்றினார். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒருவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றது இதுவே முதல் முறையாகும். இதனை ஒரு சமுதாய மறுமலர்ச்சி என்றும், ஓர் உண்மைத் தொண்டனுக்குக் கிடைத்த வெற்றி என்றும் பல இந்தியத் தலைவர்கள் புகழ்ந்தனர். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, உண்மைத் தொண்டனுக்குப் பெருந்தலைவர் காமராசர் தந்த மரியாதை என்பதே உண்மை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book