16

க்கன் போட்டியிட்டதற்குப் பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றாலும் அவர்தம் பின்புல வலிமையைப் பார்த்து அவர்கள் அடங்கிப் போயினர். தாம் வாழும் வட்டாரச் சூழலைப் பார்த்துக் கொண்டிருக்கும் தந்தை பூசாரிக்கக்கன் அச்சப்பட்டார். கலவரங்கள் வந்துவிடக் கூடாதே என்ற உணர்வோடு எதிரணி வேட்பாளரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். திட்டமிட்டப்படி தேர்தல் நடந்தது. பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் கக்கன் வெற்றி பெற்றார். உண்மையான தொண்டிற்குக் கிடைத்த இவ்வெற்றியே இவர்தம் அரசியல் வாழ்விற்கு நல்லதொரு திருப்பு முனையாக அமைந்தது.

அகர முதலியில் (அகராதி) கூட உழைப்பு, தொண்டு, நேர்மை ஆகிய சொற்களுக்குப் பின்னர் வெற்றி என்ற சொல் இடம் பெற்றே தீரும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

கவிஞர் இக்பாலை அவருடைய ஆசிரியர், ‘பள்ளிக்கு ஏன் தாமதமாக வந்தாய்’? என்றாராம். உடனே இக்பால், ‘இக்பால் தாமதமாகத் தான் வரும்’ என்றாராம். இக்பால் என்ற சொல்லிற்குப் புகழ் என்று பொருள். எனவே புகழ், பதவி போன்றவை உழைப்பு, தொண்டு, நேர்மை ஆகியவற்றைக் கடக்க காலம் எடுத்துக் கொண்ட பின்னரே வந்து சேரும்.

நாடாளுமன்ற உறுப்பினர்

நாட்டு விடுதலைக்குப்பின் தாய்நாட்டிற்கென்று ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிக்கொள்ளக் காலஇடைவெளி தேவைப்பட்டது. அதனால்தான் 1947 ஆம் ஆண்டு விடுதலை பெற்றும் 1950சனவரி இருபத்தாறாம் நாள்தான் அரசியல் அமைப்புச் சட்டம் கொண்ட குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.

அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போல் தேர்தல் நடத்த, மேலும் இரண்டாண்டுகள் தேவைப்பட்டன. 1952இல் நாட்டின் முதல் பொதுத்தேர்தல் நடந்தது.

இப்பொதுத் தேர்தலில் கக்கன் மதுரைத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். அன்று நம் நாட்டில் இரட்டை வேட்பாளர் முறை இருந்தமையால் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கென்று தனித்தொகுதி எதுவுமில்லை. எனவே மதுரை மத்தியத் தொகுதியில் காங்கிரசைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். தாழ்த்தப்பட்ட இன மக்களின் சார்பில் கக்கனையும் பிற மக்களின் சார்பாகக் கொடிமங்கலம் பாலசுப்பிரமணியம் ஐயரையும் வேட்பாளராகக் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களான கக்கன் மற்றும் கொடிமங்கலம் பாலசுப்பிரமணிய ஐயர் ஆகிய இருவரும் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராயினர். 1952 முதல் 1957வரை நடந்த நாடாளுமன்ற அனைத்துக் கூட்டத் தொடர்களிலும் கக்கன் தவறாமல் கலந்து கொண்டு பொறுப்புள்ள உறுப்பினராக நடந்து கொண்டார். அவர் அலிப்புரம் சிறையிலிருந்த காலங்களில் கற்றுக் கொண்ட இந்தி மொழியறிவும், அரசியல் அமைப்புச் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது பெற்ற பட்டறிவும் அவருக்கு உதவியாக இருந்தன.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book