15

க்கன் பொதுத் தொண்டின் மூலம் மக்களைச் சந்தித்து மக்கள் தொண்டன் என்று பெயர் பெற்றார். தன்னலமற்ற தொண்டைச் செய்தமையால் இவர்தம் பணிகளில் தடைகள் வந்ததாகத் தெரியவில்லை. அப்படி வந்த தடைக்கற்களையும் படிக்கட்டுகளாகக் கொண்டு முன்னேறினார். மிகச்சிறந்த சமுதாயத் தலைவர்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்பு அதற்கு வழியமைத்துக் கொடுத்தது. இரவுப்பள்ளி, மக்களிடம் கல்வி, தன்னலமற்ற பொதுத்தொண்டு என்று மக்களிடையே பேரும் புகழும் வளர்ந்து வரும் சூழலில் ‘மாவட்டக் கழக உறுப்பினர்’ (District Board Member) தேர்தல் வந்தது. 1941-42 காலக்கட்டத்தில் நடைபெற்ற இத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர் பட்டியல் தெரிவு செய்யப்பட்டது. அப்பட்டியலில் மேலூர் வட்டத்தில் கக்கன் போட்டியிட அனைத்துத் தலைவர்களாலும் முடிவு செய்யப்பட்டது.

இந்தத் தேர்தலில் இவரே விரும்பிப் போட்டியிட்டார் என்று சொல்ல முடியாது. இவர் தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. இவர்தம் உண்மையான தன்னலமற்ற தொண்டும் அதனால் மக்கள் இவர்மீது கொண்ட நம்பிக்கையும் முதற்காரணமாகும்.மற்றொன்று எதிரணி வேட்பாளரான மதுரை மேலூர் வையாபுரி அம்பலம் அவர்களின் மீது மக்களும் தலைவர்களும் கொண்டிருந்த எதிர்ப்பு இரண்டாவது காரணமாகும். இந்த இரண்டு காரணங்களும் உண்மை என்றாலும் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவர் மேல்தட்டுக்காரரை எதிர்ப்பது என்ற சூழலைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

மேலும் அன்றைய சமுதாய ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார நிலை ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டார் என்று எடுத்துக் கொள்வதே உண்மையானதாக இருக்கும். எப்படி இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்டார்.

வைத்தியநாதய்யர், என்.எம்.ஆர்.சுப்புராமன், கருப்பன் செட்டியார் ஆகியோரின் பின்புலத்தோடு தேர்தல் களத்தில் நின்றாலும் ஓர் அம்பலவர் இனத்தவரை எதிர்த்து, தாழ்த்தப்பட்ட இனத்தவர் ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அதிலும் நாடு விடுதலை பெற்று 50ஆண்டுகள் கடந்த பின்னும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சட்டங்கள் வந்த பின்னும் நெஞ்சைப் பிளக்கும் இனக்கொடுமைகளை நம்மால் காணமுடிகிறது. மக்களாட்சி முறையில் நடக்கும் சிறு ஊராட்சித் தேர்தலில் ஒரு தாழ்த்தப்பட்ட குடிமகன் வேட்பு மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படாத அளவிற்குத் தீண்டாமைக் கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. இக்கொடுமையைத் தட்டிக் கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ எவரும் முன்வருவதில்லை. சமுதாயச் சுய மரியாதையை ஏற்றுக் கொள்ளும் அமைப்புகள் கூட முன்வருவதில்லை. இன்றுகூட இவ்வாறு நடக்கிறதென்றால், ஒர் அறுபது ஆண்டுகளுக்கு முன் சமுதாயக் கொடுமைகளும் அதையொட்டிய நடைமுறைகளும் எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. காரணம் மேற்சொன்ன இனக் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மேலவளவு கிராமம் கக்கன் பிறந்த தும்பைப்பட்டிக்கு அருகில் அமைந்துள்ளது. அதிலும் கக்கன் போட்டியிட்ட மாவட்டக் கழக உறுப்பினர் தேர்தல் வட்டத்தில் மேலவளவும் அடங்கும்.

விடுதலைக்குப் பின் சட்டம் வாயிலாக இடஒதுக்கீடு வந்த பின்னும், நடைமுறை படுத்தவிடாமல் தடுக்கப்பட்ட அரசியல் உரிமையை, விடுதலை பெறாத காலத்தில் சட்டம் வாயிலாக உரிமைகள் பாதுகாக்கப்படாத காலத்தில் மிகப் பெரிய உரிமையை வழங்கி மகிழ்ந்த அக்காலச் சமுதாயத் தலைவர்களை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book