13

டுத்த நாள் மேலூர்க் காவல் நிலையத்தில் கக்கன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இரகசிய இடங்களையும், யார் யார் தலைமறைவாக இருக்கிறார்கள் என்பதையும், எங்கெல்லாம் சந்திப்பு நடக்கிறது என்பதையும் கேட்டனர். சொல்ல மறுத்ததால் கசையடி கொடுக்க ஆணையிடப்பட்டது.

ஐந்து நாள் தொடர்ந்து கசையடி கொடுக்கப்பட்டது. இந்த ஐந்து நாளும் அவர்தம் மனைவி கக்கன் அடிவாங்குவதைப் பார்க்க அழைத்து வரப்பட்டார். இக்கொடுமையைக் கண்டு அவ்வம்மையார் கண்ணீர் வடித்தார்.

அடியின் கொடுமை தாங்க முடியாமல் கக்கன் நினைவு இழந்தார். இவ்வாறு சுயநினைவு இழந்த கைதிகளை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவது வழக்கம். கக்கனையும் மருத்துவமனைக்குக் கொண்டு போக முடிவு செய்தனர். நினைவிழந்த கக்கனைக் குதிரை வண்டியில் (சடுக்கா) கால் வைத்து ஏறும் இடத்தில் தூக்கிப் போட்டு வண்டியை ஓட்டினர். வலுவான, உயரமான உருவம் கொண்டவர் என்பதால் முதுகு மட்டும் வண்டியில் இருந்தது. தலை ஒருபுறம் தொங்க, கால்கள் மறுபுறம் தொங்கின. சாலையில் கையும் காலும் இடிபட வண்டி மருத்துவமனையை நோக்கி நகர்ந்தது. இந்தக் கொடுமையை மக்கள் சாலையோரங்களில் நின்று உள்ளந்துடிக்க பார்த்ததையும் கண்ணீர் விட்டதையும் இன்றும் முதியவர்கள் சிலர் சொல்லிச் சொல்லி நெகிழ்ந்து போகிறார்கள்.

இத்துணைக் கொடுமைக்கு உள்ளாக்கிய போதும் விடுதலைப்போர் வீரர்களின் பெயர்களையும் அவர்கள் இருக்கும் இடங்களையும் கக்கன் சொல்லவே இல்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. அத்துணைக் கொடுமைகளுக்குப் பின்னரும் உயிர் தப்பினார் என்பது ஒரு வியத்தகு செய்தியாகும்.

தம்மை இழந்து பிறரைக் காப்பாற்றும் மனவலிமையையும் எந்தச் சூழலிலும் எவரையும் காட்டிக் கொடுக்காத மாண்பும் உடையவர் கக்கன் என்பது பிற தலைவர்களுக்குத் தெரிய வந்தது.

உடல் நலமில்லா நிலையிலேயே கக்கனை நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார்கள். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர் என்றும், மதுரையைச் சுற்றி அறுக்கப்பட்ட தந்திக் கம்பிகளுக்கு இவரே காரணமென்றும், அஞ்சல் நிலையங்களைக் கொளுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. குற்றத்தைச் செய்தாயா? இல்லையா? என்ற வினாக்கள் எழுப்பப்படவில்லை. கக்கனுக்கு எவ்வித விசாரணையுமின்றிக் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book