12

னிமனித அறப்போர் விலக்கிக் கொள்ளப்பட்டதும் சர் ஸ்டார்போர்டு அவர்கள் தலைமையில் ஒரு குழு, 25.03.1942 ஆம் நாள் இந்தியா வந்தது. காங்கிரஸின் மூத்த தலைவர்களான காந்தியடிகள், மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இந்தியாவுக்கு (டொமினியன் அந்தஸ்து) காலனி ஆதிக்க அங்கீகாரம் வழங்க ஒப்புக் கொண்டது.

விலங்கில் பொன் விலங்கா? இப்படியொரு ஏமாற்றமா? ஒப்புக் கொள்ள முடியாது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாடற்ற முழுமையான விடுதலை மட்டுமே தேவை.அடிமை விலங்கிலிருந்து விடுபடவே இந்தியர்கள் விரும்புகிறோம். எந்தச் சூழலிலும் பிரிட்டனின் ஆளுமை இருக்கக் கூடாது. எனவே டொமினியன் அந்தஸ்த்தை முழு விடுதலையாகக் கொள்ள முடியாது’ என்று காந்தியடிகள் வாதிட்டார். காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுவும் காலனி ஆதிக்க உரிமையை ஏற்கவில்லை.

அதன்பின் இறுதிக் கட்டப் போராட்டத்திற்கான வழிவகைகளை ஆராய்ந்து ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற போராட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏழாம் நாள் காந்தியடிகள் தலைமையில் போராட்டம் தொடங்கப்பட்டது. இதைத் தொடங்கி வைத்துப் பேசிய காந்தியடிகளின் பேச்சு மக்களின் மனங்களை வெகுவாகத் தூண்டி விட்டது. ‘வாழ்ந்தால் விடுதலை நாட்டில் வாழ்வோம், இல்லையேல் போராடி உயிர் நீப்போம்‘ என்ற சூளுரையை நாடு முழுவதுமுள்ள மக்கள் அப்படியே ஏற்றுக் கொண்டனர். ‘செய் அல்லது செத்து மடி’ என்ற மனவலிமையோடு மக்கள் போராட முன்வந்தனர். இந்த நிலையில்தான் காங்கிரஸ் பேரியக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் தலைவர்கள் பலர் சிறை பிடிக்கப்பட்டனர். அதனால் பலர் தலைமறைவாகிப் போராட்டப் பணிகளைச் செய்து வந்தனர்.

தமிழ்நாட்டிலும் பலர் தலைமறைவாகி இளைஞர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தினர். அவ்வாறு தலைமறைவாகிப் போராட்டப் பணிகளைச் செய்து வந்த தமிழகத் தலைவர்களில் கக்கனும் ஒருவர். மேலும் மதுரை மேலூரைச் சேர்ந்த இராமசாமி, பழனிச்சாமி ஆகிய தலைவர்கள் இவரோடு தலைமறைவான தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இரவு நேரங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடுவதும் போராட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவுகள் எடுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. இவ்வாறு இரவு நேரக் கூட்டங்களை முடித்துக் கொண்டு அவரவர்களுக்கு ஏதுவான இடங்களில் ஓய்வெடுத்துக் கொள்வது வழக்கமாகும். அந்த வகையில் கக்கன் மேலூர் மாணவர் விடுதிக்கு அவ்வப்போது வந்து ஓய்வெடுத்துப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதைக் கண்காணித்த காவல்துறை, விடுதிக்கு வருவோர் போவோர் மீது பார்வையைச் செலுத்தியது. இதைத் தெரிந்து கொண்ட கக்கன் பல நாள்கள் மாறுவேடங்களில் வந்திருக்கிறார். பொதுவாகப் பெண்வேடம் அணிந்து வருவதால் சிக்கல் இல்லாமல் எளிதாக வந்து சென்று கொண்டிருந்தார். இசுலாமியப் பெண்வடிவில் சென்று ஆங்கிலேயேர் காவலில் இருந்த மணிக்கூண்டுப் பகுதியில் லால்பகதூர் சாஸ்திரி கொடியேற்றி காவல்துறையைத் திணறடித்த நிகழ்ச்சி இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.

கக்கனின் நடமாட்டத்தை உளவுத்துறை மூலமாகக் கண்காணித்த காவல்துறை ‘விடுதிக்குள் சென்ற பெண்ணுருவம் கக்கனாகத்தான் இருக்க வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தது. கக்கன் விடுதி மொட்டைமாடியில் தூங்கிக் கொண்டிருப்பதையும் உறுதி செய்தது. காவல்துறை அதிகாரிகள் விடுதியைச் சுற்றி வளைத்தனர். தப்பிக்க இயலாத நிலையில் 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பத்தாம் நாள் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்தச் செய்தி அன்று விடுதியில் கக்கனோடு தங்கி இருந்த கீழையூரைச் சேர்ந்த செல்லப்பா அவர்களுக்குத் தெரிய வந்தது. அவர் மனம் அதிர்ந்து போனார். இச்செய்தியை எப்படியும் மக்களுக்குத் தெரிவித்துவிட வேண்டும் என்று எண்ணினார். மறுநாள் காலை தாமே ‘டாம் டாம்’ போட்டுப் பொதுமக்களுக்குத் தெரிவித்தார். இப்படியொரு இரகசியச் செய்தியை மக்களிடையே கொண்டு வந்தமைக்காகக் கீழையூர்ச் செல்லப்பாவும் சிறை செய்யப்பட்டார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book