11

விடுதலைப் போரின் தந்தையான காந்தியடிகள் தனிமனித அறப்போர் (தனிமனித சத்தியாகிரகம்) என்ற போராட்டத்தை அறிவித்தார். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த காந்தியடிகள் இதற்குப் பல விதிமுறைகளையும் அறிவித்தார். இப்படி அறிவிக்க முக்கியக் காரணமாக இருந்த வரலாற்றுச் சூழலைத் தெரிந்து கொண்டால்தான் கக்கனின் விடுதலை வேட்கையை நம்மால் உணர முடியும்.

இந்தியாவின் முழு விடுதலை மட்டுமே எங்களுக்கு வேண்டும் என்ற காங்கிரஸின் வேண்டுகோளை ஆங்கில அரசு ஏற்கவில்லை. இந்திய மக்களின் ஒப்புதல் இல்லாமல் இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை ஈடுபடுத்தியது. இச்செயலை வன்மையாகக் கண்டித்த காங்கிரஸ், இனி தீவிரமாகப் போராட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. அதன் விளைவாகத்தான் இந்தத் தனிமனிதப் போராட்டத்தைக் காந்தியடிகள் அறிவித்தார். இவ்வறிவிப்பை மக்கள் ஏற்றனர். ஆனால் இரண்டு கட்டளைகள் இடப்பட்டன. இந்தப் போராட்டத்தில் சிறை சென்று திரும்பினால் மீண்டும் போராடிச் சிறை செல்ல மனத்துணிவு வேண்டும் என்பது ஒன்று. தீண்டாமை ஒழிப்பு, இந்து முஸ்லீம் ஒற்றுமை, ஆதாரக் கல்வி, தாய் மொழிப்பற்று, பெண்களின் நலவாழ்வு, ஆகியவற்றில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள மனத்துணிவு வேண்டும் என்பது மற்றொன்று. பாரதி பாடிய

நெஞ்சக் குருதியை நிலத்திடை வடித்து

வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்’

என்ற நெஞ்சத் துணிவோடு இந்த இரண்டு கட்டளைகளையும் ஏற்று, போராட்டத்தில் ஈடுபட பல்லாயிரம் வீரர்கள் விண்ணப்பம் செய்தனர். ஆனால், விண்ணப்பம் செய்தவர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இயக்கப்பணிகளில் முழுஈடுபாடு கொண்ட தன்னலமில்லாத தொண்டர்களை மட்டுமே தெரிவு செய்து அனுமதித்தனர். இந்தத் தெரிவு கூட காந்தியடிகளின் நேரடிப் பார்வையில் நடந்தது. தமிழகத்திலிருந்து பலநூறு பேர் போராட்டத்தில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருந்தாலும் குறிப்பிடத்தக்க தொண்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு காந்தியடிகளால் தெரிவு செய்து அனுமதிக்கப்பட்ட தலைவர்களில் வடக்கே வினோபாஅடிகளாரும், தெற்கே கக்கன் அவர்களும் இருந்தனர் என்பது எண்ணிப் பெருமைப்படத்தக்கதாகும்.

மக்களுக்கான பொதுச் சேவையிலும் விடுதலைப் போரிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கக்கன் இத்தனிமனித அறப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவர்தம் நடவடிக்கைகளைக் கண்காணித்த ஆங்கில அரசு இவரை 24.10.1940 ஆம் நாள் தேசத்துரோகக் குற்றம் செய்ததாக நீதிமன்றத்தில் நிறுத்தியது. நீதிமன்றம் விதித்த கடுங்காவல் தண்டனையை முதல் பதினைந்து நாள்கள் மேலூர்க் கிளைச்சிறையிலும்.மீதி நாள்களை மதுரை மத்திய சிறைச் சாலையிலும் கழித்தார். காங்கிரஸ் கட்சி இப்போராட்டத்தை விலக்கிக் கொள்வதற்கு முன்பே இவர் விடுதலை செய்யப்பட்டார்.

வட்டப்பொறுப்பிலிருந்து மாவட்டப்பொறுப்பு

விடுதலையாகி வரும் முன் இவருக்கு மாவட்ட அளவிலான பொறுப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அவ்வாறே 21.1.1941ஆம் நாள் மதுரை ‘மாவட்டப் பொருளாளர்’ என்ற பொறுப்பினை ஏற்றார். இதிலிருந்து ஒவ்வொரு சிறைத் தண்டனைக்குப் பின்னும் இவருக்குச் சிறப்பும் உயர்வும் தேடி வந்தன என்பதைக் காண முடிகிறது.

நீருள்ள குளத்தைத் தேடித் தவளைகளும் தடாகத்தைத் தேடி அன்னப்பறவைகளும் தாமாகவே வருவதைப் போல் முயற்சியையும் உயர்ந்த குறிக்கோளையும் உடையவனைத் தேடி இன்பமும் புகழும் வந்து சேரும்’ என்ற ஜப்பானியப் பழமொழி இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book