101

1979 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மதுரைக்குச் சென்ற கக்கன், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்றும் உடல் நலம் தேறியபாடில்லை. சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். உடல்நலம் படிப்படியாகப் பாதிக்கப்பட்ட நிலையில 1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆணையின் பேரில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், முதுமை காரணமாகச் சிகிச்சை பலனளிக்கவில்லை. சுயநினைவு திரும்பாத நிலையிலே சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாளன்று கக்கன் இயற்கை எய்தினார்.

மனிதன் பிறப்பதும் இறப்பதும் இயற்கை. இதில் சிலரின் உடல் அழிந்து போனாலும் அவர்கள் பெற்ற புகழ் அழிவதில்லை. வாழ்ந்த காலங்களில் மனித சமுதாயத்திற்கும் அவர்களது தாய் நாட்டிற்கும் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதைப் பொறுத்தே அந்தப் புகழ் அமைகிறது. ஒரு மனிதன் வாழ்ந்தான் என்று சொன்னாலே அவன் மக்கள் மனத்தில் இடம் பிடித்துள்ளான் என்பதைக் குறிக்கும். வாழும்போது மட்டுமல்லாமல் மரணத்திற்குப் பின்னும் அவன் மக்களால் நினைவு கொள்ளப்பட்டால் மட்டுமே அவன் வாழ்ந்ததாகக் கொள்ள முடியும். இதைத்தான் “வசையொழிய வாழ்வாரே வாழ்வார்” என்றார் வள்ளுவர். அப்படியானால் ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றி பெற்றதா? தோல்வியுற்றதா? என்பதை அம்மனிதனின் மரணத்திற்குப் பின் நிலைத்து நிற்கும் எச்சத்தைக் கொண்டே அளவிட வேண்டும். இந்த அளவுகோலைக் கொண்டு அளவிட்டால்தான் கக்கனின் 72 ஆண்டுகால வாழ்க்கை வரலாற்றை நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

எச்சம் என்பதை, அவரவர் ஈன்ற பிள்ளைகள் என்று பலர் பொருள் கூறுவதைப் பார்க்கிறோம். ஆனால், அது பொருந்தாப் பொருளாகத் தோன்றுகிறது. காரணம் பிள்ளைகள் இல்லாத பெருந்தலைவர்களுக்கு இது பொருந்துவதில்லை. முன்னால் முதல்வர் பெருந்தலைவர் காமராசர் திருமணமே செய்து கொள்ளவில்லை. அப்படியானால் அவரை மேற்சொன்ன அளவுகோலைக் கொண்டு அளவிட முடியாத நிலை வந்த விடும். பெருந்தலைவர், ஏழைப்பங்காளன் என்று சொன்னால் காமராசரை மட்டுமே குறிக்கும். அந்த அளவிற்குப் புகழெச்சம் நிரம்பிய தலைவர் காமராசர்.

எனவே எச்சம் பலவகையானது என்று ஊகிக்க முடிகிறது. எச்சம் என்பது ஒருவர் நினைத்தவை, பேசியவை, செய்தவை என விரிவாகப் பொருள் கொண்டு அவற்றை, சொல்லெச்சம், செயலெச்சம், அடையாள எச்சம் என்று மூன்று வகைக்குள் அடக்கலாம்.

ஒரு மனிதனால் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை மீண்டும் மீண்டும் மக்களின் வளர்ச்சிக்குச் சொல்லப்படுமேயானால் அவை சொல்லெச்சம் ஆகும். இதற்கு விவேகானந்தரின் அறிவுரைகளை உதாரணமாகக் காட்டலாம். அவரது பொன்மொழிகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நம்மால் காண முடிகிறது.

தமது வாழ்க்கையை அடையாளம் காட்டி, அதுபோலவே பிறரும் வாழ வழிகாட்டியாக அமைத்துக் கொள்வது செயலெச்சம் ஆகும். காந்தியடிகள், வள்ளலார் போன்றோர் அவர்களது வாழ்க்கையையே அடையாளமாகக் காட்டினர். அதையும் மக்கள் ஏற்று நடந்து கொள்வதைப் பார்க்கிறோம்.

எவராலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்றைக் கண்டுபிடித்து அல்லது பிறரால் செய்யமுடியாத ஒன்றைச் செய்து வைத்து, அதை வருங்கால மக்கள் கண்டுபிடித்தவன் செய்து வைத்தவன் பெயரைச் சொல்லும் அளவிற்குச் செய்து வைப்பது அடையாள எச்சம் எனப்படும். தம் மனைவியின் மேல் கொண்டிருந்த அன்பின் காரணமாக நினைவாலயம் என்ற பெயரில் கட்டப்பட்ட தாஜ்மஹால் இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

மனிதர்களை எடைபோட்டு அறிய இந்த மூன்று அளவுகோல்கள் போதுமானவை என்று தோன்றுகிறது. அவ்வகையில் அரிதான தலைவர்களில் ஒருவராக, அரசியல் அறத்தின் எச்சமாக இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் கக்கன்.

பிழைக்கத் தெரியாதவர்கள் என்று

பழிக்கப்படுபவர்களால்தான்

இந்த உலகம்

பிழைத்துக்கொண்டிருக்கிறது”

************************************************************

இந்த நூலை வாசிப்போர் தமது உள்ளத்தில் எழும் எங்களுக்கு எழுதி அனுப்பினால் அடுத்தி வரும் பதிப்பில் இப்பகுதியில் அது அச்சேரும்.

இந்த நூலை பகுதி பகுதியாகவோ பயன்படுத்தி கொள்ள அனிமதி உண்டு.

கலைமாமணி வீ.கே.டி பாலன்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book