1

ந்த உலகத்தில் இப்போதெல்லாம் மக்கள் தொகை பெருகிக் கொண்டிருக்கிறது. ஆனால் மனிதர்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இது ஓர் அறிஞரின் கணிப்பு. அதிர்ச்சியாக இருந்தாலும் இது தான் உண்மை. உருவத்தில் மனிதர்களாக இருக்கிற பலர் மனதால் மனிதர்களாக இருப்பதில்லை. உருவத்தாலும், உள்ளத்தாலும் மனிதனாக வாழ்ந்து காட்ட தும்பைப்பட்டியில் ஒரு பிள்ளை பிறந்தது. அதுதான் கக்கன் என்ற பிள்ளை.

தமிழகத்தின் வரலாற்றில் மதுரை மாவட்டத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் நாட்டுக்கள்வர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தார்கள். இவர்கள், மதுரை நாயக்கர்களின் காலத்திலும் பின்னர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் காலத்திலும் ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து போகாமல் தன்னரசு கொண்ட தனிக்கள்ளர் நாடாகவே இருந்துவரப் போராடி வந்துள்ளனர். மதுரை அரசிற்கு எதிராக, வடக்கேயிருந்து வரும் படைகளை எதிர்த்துச் சமாளிக்க, இந்த நாட்டுக்கள்ளர்களின் ஆதரவு மதுரையின் ஆட்சியாளர்களுக்குத் தேவைப்பட்டது. எனவே தான் வல்லமை வாய்ந்த மதுரை திருமலைநாயக்கரும் அரசியல் கயமை நிறைந்த கான்சாகிப்பும் இக்கள்ளர்களின் தன்னாட்சியைப் பொறுத்துக் கொண்டிருந்தது மட்டுமின்றி, அவ்வப்பொழுது தட்டிக்கொடுத்து வேலை வாங்கியும் வந்தார்கள். ஆங்கில ஆட்சியாளர்கள், இக்கள்ளர்களின் தொல்லை தாங்கமுடியாமல் இவர்களைக் கொள்ளையர்கள் என்றும், கொடியவர்கள் என்றும், குற்றப்பரம்பரையினர் என்றும் குறித்து வைத்துள்ளனர். ஆனால், இக்கள்ளர்களின் கிராம உள்ளாட்சி முறையும் நாட்டுப்புறப் பழக்க வழக்கங்களையும், கலைப்பிரியங்களையும், கோவில்களையும் அதனைச் சார்ந்த திருவிழாக்களையும் மையமாகக் கொண்டு அமைந்த இவர்களின் சமூகவாழ்வும், அதில் அவர்கள் கடைப்பிடித்த ஒழுங்கும், கட்டுப்பாடுகளும் ஆங்கிலேயர்கள் அறியாதவை. தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் முக்குலத்தோரையும் அரிசனமக்களையும் இணைந்து வாழச் செய்யவிடாமல், கூர்மதி கொண்டவர்களின் சதியினால் இனக்கலவரங்கள் ஏற்பட்ட காலத்தில் கூட இப்பகுதியில் கள்ளர்களும், அரிசனமக்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து இணைந்தே வாழ்ந்து வந்துள்ளனர். கள்ளர்களின் திருவிழாக்களில் அரிசன மக்கள் சாமியாடிக் குறி சொல்லுவதும் அரிசன மக்களைப் பூசாரிகளாகக் கொண்ட கோவில்களில் கள்ளர்கள் வழிபாடு செய்து விபூதி பெற்றுக்கொள்வதும் வருடப்பிறப்பு சித்திரை மாதம் முதல்நாளில், கள்ளர்கள் கையில் வெற்றிலை பிடித்து ஏர்பிடித்து உழும்நாளில் அரிசனக்குடிகளைத் துணைக்கு அழைத்துச் செல்வதும் இன்றும் கண்குளிரக் காணவேண்டிய காட்சிகளாகும். அந்தளவிற்கு அங்கு பொறுப்பு, கண்ணியம், பாசம், விசுவாசம், சகிப்புத்தன்மை ஆகியன இருந்து வந்தன. இக்கள்ளர்களின் நாட்டுப் பிரிவினையில், மேலூரை மையமாகக் கொண்ட நடுவி நாடும், கிழக்கே வெள்ளமேற்கே வல்லாளபட்டி, அழகர் கோவிலை மையமாகக் கொண்ட மேலநாடும், வடக்கே அட்டட்டியை மையமாகக் கொண்ட சிறுகுடி நாடும் இன்றும் கள்ளர்களின் சமுதாய வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றுவருகின்றன, இதில் சிறுகுடி நாட்டைச் சார்ந்த கிராமம் தும்பைப்பட்டியாகும்.

மதுரையிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் மேலூருக்கு வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் தும்பைப்பட்டி அமைந்துள்ளது. மதுரையிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 1990-ம் ஆண்டின் நிலவரப்படி, தும்பைப்பட்டிக் கிராமத்தின் மக்கள்தொகை 2,647 என்றுதான் இருந்தது என்றால், கக்கன்ஜி பிறந்த காலத்தில் அதன் மக்கள்தொகை எவ்வளவு சிறியதாக இருந்திருக்கும் என நினைத்துப் பார்க்க முடிகிறது. கக்கன்ஜி பிறந்து வளர்ந்த கிராமம் இதுவேயாகும். இங்குள்ளோர் தும்பைப்பூமாலை போட்டு மகிழ்ந்ததால் தும்பைப்பட்டி என்ற பெயர் எழுந்தது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book